

பெய்ஜிங்,
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்தியா-பூடான்- சீனா ஆகியவற்றின் முச்சந்திப்பு எல்லை அருகே டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு 2012-ம் ஆண்டு இந்தியா அமைத்த 2 பதுங்குகுழிகளை அண்மையில் சீனா அழித்தது. மேற்கொண்டு சீன ராணுவம் சேதம் விளைவிப்பதையும், ஊடுருவுவதை தடுக்கவும் அங்கு இந்தியா ராணுவத்தை குவித்து உள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த படைகளை திரும்பப் பெறுமாறு சீனா வற்புறுத்தி வருகிறது.
என்றபோதிலும் டோக்லாம் பகுதியில் இந்திய படைகள் நகராமல் அப்படியே நிலை கொண்டு உள்ளன. இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த பகுதி தங்களுடைய எல்லைக்குள் இருப்பதாகவும் சீனா கூறுகிறது.(டோக்லாம் பகுதியை பூடான் நாடும் உரிமை கோருகிறது)
இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜெங் சுயாங்க் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நம்பிக்கை துரோகம்
1890-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சிக்கிம் மீதான சீன-பிரிட்டிஷ் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு 1959-ம் ஆண்டு அப்போதைய சீன பிரதமர் சூ என் லாய்க்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதைத்தொடர்ந்து வந்த இந்திய அரசுகளும் இதை ஏற்றுக்கொண்டு உள்ளன.
சிக்கிம் பகுதியில் இந்திய-சீன எல்லை நன்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தை இந்தியா நன்றாக கூர்ந்து கவனிக்கவேண்டும். டோக்லாம் பகுதி எங்களுக்கே சொந்தமானது. தற்போது இந்திய அரசு இங்கு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு இந்த ஒப்பந்தத்துக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகும். எனவே இந்திய துருப்புகள் உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும்.
1962-ல் இருந்த இந்தியா வேறு. இன்று இருக்கும் இந்தியா வேறு என்று அவர்(அருண்ஜெட்லி) கூறியது உண்மைதான். அதே நேரம் சீனாவும் அப்போது இருந்தது போல் இப்போது இல்லை. சீனாவும் மாறி இருக்கிறது.
தனது எல்லையின் மீதான இறையாண்மையை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சீனா எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள் ளார்.