இந்தியா வழங்கிய யானை அமெரிக்காவில் கருணைக்கொலை: அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அம்பிகா யானை.

இந்தியா அன்பளிப்பாக வழங்கிய யானை, 72 வயதில் அமெரிக்காவில் கருணைக்கொலை செய்யப்பட்டது.
இந்தியா வழங்கிய யானை அமெரிக்காவில் கருணைக்கொலை: அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அம்பிகா யானை.
Published on

வாஷிங்டன்,

1961-ம் ஆண்டு இந்தியா ஒரு குட்டி யானையை, அமெரிக்காவிற்கு வழங்கியது. இந்திய குழந்தைகள் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அந்த யானை அன்போடு அம்பிகா என்று அழைக்கப்பட்டு வந்தது.

வாஷிங்டன் நகரில் உள்ள சுமித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவில் அம்பிகா வளர்க்கப்பட்டது.

அங்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் அம்பிகா ஈர்த்து வந்தது. 72 வயதை எட்டியதால் முதுமையின் காரணமாக சமீபத்தில் நோய்வாய்ப்பட்டதுடன் அவதியும் பட்டு வந்தது.

அம்பிகாவின் உடல்நிலை மருத்துவ சிகிச்சைக்கு பூரண ஒத்துழைப்பு தராததால் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் வருத்தம் அடைந்தனர். இதனால் வேறு வழியில்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை அதை கருணைக்கொலை செய்தனர்.

அம்பிகா இந்தியாவில் கர்நாடக மாநிலம் குடகுமலையில் 1948-ம் ஆண்டு பிறந்தது. 8 வயதுவரை மரத்தடிகளை வனப்பகுதியில் இருந்து இழுத்து வரும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டது.

கருணைக்கொலை செய்யப்பட்ட அம்பிகா வட அமெரிக்காவில் இருந்த ஆசிய யானைகளில் மூத்த 3-வது யானை என்று கருதப்படுகிறது.

அம்பிகா விரும்பும் தானியங்களையும், உணவு வகைகளையும் வரிசைப்படுத்தி உண்ணும் விதம்குறித்தும், அதன் புத்தி கூர்மை குறித்தும் அந்த யானையை பராமரித்து வந்தவர்கள் பெருமையாகச் சொல்கிறார்கள்.

கடந்த 50 ஆண்டுகளாக ஆசிய நாடுகளின் யானைகள் வகைக்கு அம்பாசிடராய் செயல்பட்ட அம்பிகா ஆசிய இன யானைகளின் உயிரியல், சூழலியல், குணநலன்கள், இனப்பெருக்கம் போன்றவைகள் பற்றி அறிய, வனவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக இருந்தது என்று வாஷிங்டன் தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர் ஸ்டீபன் மான்போர்ட் பெருமிதம் கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com