

ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிற லம்பாக் தீவில் காலையில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாதரம் என்ற நகரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் 7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியுள்ளது. பூகம்பம் ஏற்பட்டபோது, தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். இதில் செம்பலூன் நகரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மின்சாரம் தடைபட்டது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்தன. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.
புகம்பம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 14 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் 160 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. நில நடுக்கத்தில் தப்பிய சிதி சுமர்னி பேசுகையில், காலை 6 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. உடனடியாக கட்டிடங்கள் இடிந்து சரியத்தொடங்கின. என் மகன் வீட்டுக்குள் அகப்பட்டு கொண்டான். ஆனால் நல்ல வேளையாக காயம் இன்றி தப்பினான், என்று குறிப்பிட்டார்.
புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் இந்தோனேசியா அமைந்து உள்ளதால் அங்கு அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறது.