காணொலிக்காட்சி வழியாக ஜோ பைடன், ஜின்பிங் சந்தித்து பேச ஒப்புதல்

அமெரிக்க, சீன உயர் அதிகாரிகள் சுவிட்சர்லாந்தில் சந்தித்து பேசினர். இதில் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொலிக்காட்சி வழியாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்தித்துப் பேசுவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
காணொலிக்காட்சி வழியாக ஜோ பைடன், ஜின்பிங் சந்தித்து பேச ஒப்புதல்
Published on

உறவில் கசப்பு

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது.வர்த்தகப்போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது என பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இரு நாட்டு அதிகாரிகள் சந்திப்பு

இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், சீனாவின் உயர் மட்ட அதிகாரியும், சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விவகாரக்குழு உறுப்பினருமான யாங் ஜீச்சியும் சுவிர்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்கள். யாங் ஜீச்சியிடம் ஜேக் சல்லிவன் பருவநிலை மாற்ற பிரச்சினையில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தி இருக்கிறார்.

சீனாவின் நடத்தை தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்தும் ஜேக் சல்லிவன் கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த சந்திப்பு 6 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. தைவான் பிரச்சினையில் சீனாவை அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கனும், ஜோ பைடன் நிர்வாக உயர் அதிகாரிகளும் கடுமையாக எச்சரித்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீனா கருத்து

இந்த சந்திப்பு பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்கையில், இரு தரப்பும் விரிவான, மனம் திறந்த, ஆழமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பு உறவு, சர்வதேச விவகாரங்கள், இரு தரப்பு நலன் தொடர்பான பிராந்திய விஷயங்கள் பற்றி பேசப்பட்டது. இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானது, இது இரு தரப்பு புரிதலும் சிறப்பாக அமைய பங்களிப்பு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா தரப்பில் கூறும்போது, இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், இரு தரப்பும் தகவல் தொடர்புகளை வலுப்படுத்துவதும், தேவையற்ற புரிதலின்மையை தவிர்ப்பதும்தான் என கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின் பிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொலிக்காட்சி வழியாக சந்தித்து பேசுவது என கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பை எப்போது நடத்துவது என்பது இனிவரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் ஜோ பைடனும், ஜின்பிங்கும் முதல்முறையாக தொலைபேசி வழியாக பேசியது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com