வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
Published on

பியாங்யாங்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது. ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது.

எனினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, அதற்கு பிரதிபலனாக அந்நாடு மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பான விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் நீடிக்கிறது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இருநாட்டு தலைவர்களின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் நிலைமை மேலும் மோசமானது.

இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் தென்கொரியா சென்றிருந்த டிரம்பை, யாரும் எதிர்பாராத வகையில் கொரிய எல்லையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு சில வாரங்களில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், தமக்கு வட கொரியா மீது எந்தவொரு வருத்தமும் இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

மீண்டும் சோதனை

வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த ஏவுகணை 250 கி.மீட்டர் தூரம் பறந்து சென்றதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை வட கொரியா இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், தங்கள் பிராந்தியத்தில் எந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையும் வரவில்லை என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com