கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை: ஓமனில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தடுப்பு நடவடிக்கையாக ஓமனில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தபடுகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை: ஓமனில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்
Published on

மஸ்கட்,

ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மட்டும் செயல்பட விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர் நிலைமை மேம்பட்டு வந்ததையடுத்து இயல்பு நிலை திரும்ப அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. நகரங்களுக்கு இடையில் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கையில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புக்கு வயதானவர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் ஆளாகின்றனர். அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, இதனை தடுக்க இரவு நேரத்தில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவது கட்டாயமாகிறது. இந்த இரவு நேர ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை 2 வாரங்களுக்கு இருக்கும். இந்த நேரத்தில் அனைத்து பொது இடங்களும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

மேலும், கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் மறு அறிவிப்பு வரும் வரை முழுவதுமாக மூடப்பட்டிருக்கும். பொதுமக்கள் அனைவரும் இந்த முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்திப்புகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களது புகைப்படம் மற்றும் விவரம் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும்.

மேற்கண்ட தகவலை கொரோனா குறித்து கண்காணித்து வரும் சுப்ரீம் கமிட்டி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com