

வாஷிங்டன்,
சர்வதேச நிதி அமைப்பின் நேர்மைக்கு சவாலாக விளங்கும் நிதி மோசடி, பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிப்பு உள்ளிட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக கடந்த 1989ம் ஆண்டு நிதி செயல்பாட்டு நடவடிக்கைக்குழு (எப்.ஏ.டி.எப்.) என்ற பெயரில் சர்வதேச குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் சிறப்பு கூட்டம் கடந்த 27ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது. இதில் பயங்கரவாதிகள் மற்றும் ஐ.நா.வால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட குழுக்கள் நிதி சேகரிப்பதை தடுக்க தவறியதற்காக பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
முன்னதாக இந்த நடவடிக்கையை தவிர்க்க பாகிஸ்தான் 26 அம்ச செயல்திட்டத்தை அளித்ததுடன், பல்வேறு நாடுகளுடன் இணைந்து தூதரக ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பாகிஸ்தானின் இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும், எப்.ஏ.டி.எப். அமைப்பு பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்து விட்டதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தான், பயங்கரவாத நிதியளிப்பு எதிர்ப்பு குறைபாடுகள் அதிகமாக கொண்டிருப்பதை எப்.ஏ.டி.எப். தொடர்ந்து எழுப்பி வந்தது. ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத குழுக்கள் நிதி சேகரிப்பது மற்றும் எடுத்து செல்வது போன்றவற்றை தடுப்பது உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு விரிவான செயல்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
எப்.ஏ.டி.எப். அமைப்பின் நடவடிக்கையை தொடர்ந்து நிதி மோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பு போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.
அங்கு வருகிற 25ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், புதிய அரசு அமைந்தபின் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என பாகிஸ்தான் நிதி மந்திரி ஷம்ஷேத் அகமது கூறினார்.
பாகிஸ்தானின் இந்த உறுதியை வரவேற்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
பாகிஸ்தானை எப்.ஏ.டி.எப். அமைப்பு கருப்பு பட்டியலில் சேர்த்துள்ள நடவடிக்கையை இந்தியா வரவேற்று உள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் நிதி மோசடி விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவலைகளை போக்குவதற்கு பாகிஸ்தானுக்கு ஒரு உயர்மட்ட அரசியல் அழுத்தம் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.
எப்.ஏ.டி.எப். அமைப்பின் இந்த செயல் திட்டம் ஒரு கால வரையறைக்கு உட்பட்டு இருக்கும் என நம்புவதாக கூறிய ரவீஷ் குமார், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க நம்பகத்தன்மை உள்ள நடவடிக்கைகளை பாகிஸ்தானும் மேற்கொள்ளும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.