பலுசிஸ்தான் சந்தையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி;10 பேர் காயம்

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பலுசிஸ்தான் சந்தையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி;10 பேர் காயம்
Published on

பலிசிஸ்தான்,

பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் இலக்கு தாக்குதல்கள் உள்பட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து, பர்கான் துணை ஆணையர் அப்துல்லா கோசோ டான் கூறுகையில்,

"ரக்னி மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் விபத்து ஏற்பட்டது" என்றார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணைக்காக அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வளைத்தளத்தில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், குண்டு வெடிப்பு நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு கூட்டம் கூடும்போது, ரத்தம் சொட்ட சொட்ட பாதிக்கப்பட்டவர்களை தன்னார்வலர்கள் தூக்கிச் செல்வதைக் காட்டுகிறது. மேலும், பழுதடைந்த மோட்டார் சைக்கிள்களும், வாகனங்களும், காய்கறிகளும் சாலையில் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது. இந்நிலையில், குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பலுசிஸ்தான் முதல்-மந்திரி மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ, "குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்துபவர்கள் மனித குலத்தின் எதிரிகள். பயங்கரவாதிகள் தங்கள் தீய இலக்குகளை அடைய நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறார்கள். ஆனால் அரசு தீய விரோத சக்திகளை வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்." என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இது குறித்து முதல்-மந்திரியிடம் அறிக்கை கோரியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com