அமைதியை விரும்பும் நாடு மீது போர் தொடுத்தால் பதிலடி தர தயார்: பாகிஸ்தான் ராணுவம்

அமைதியை விரும்பும் நாடு மீது போர் தொடுத்தால் பதிலடி தர தயார் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.
அமைதியை விரும்பும் நாடு மீது போர் தொடுத்தால் பதிலடி தர தயார்: பாகிஸ்தான் ராணுவம்
Published on

கராச்சி,

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றி கொண்டு 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணமடைந்தனர்.

இந்த தற்கொலை தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந்தேதி பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்தின்போது, இந்திய விமானியை பாகிஸ்தான் சிறை பிடித்தது. அதன்பின்னர் அவரை பாகிஸ்தான் விடுவித்தது. எனினும், பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதும், அதற்கு அடுத்த நாள் பாகிஸ்தான் விமான படையின் பதில் தாக்குதல் என அடுத்தடுத்த நாட்களில் இரு அணு ஆயுத நாடுகள் இடையே போர் ஏற்பட கூடும் என்ற பரபரப்பு காணப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், அமைதியை விரும்பும் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டால், வலிய தாக்குதல் நடத்தப்பட்டால், அன்னை தேசத்தின் ஒவ்வொரு அங்குல நிலமும் பாதுகாக்கப்படுவதுடன், எதிரிக்கு எதிராக போராட ஆயுத படைகள் தயாராகவும் உள்ளன என தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, புல்வாமா தாக்குதல் என பொய்யாக கூறி பாகிஸ்தான் வான் பரப்பில், அத்து மீறி நுழைந்த இந்தியாவுக்கு சரியான பதிலடி கொடுத்த பாகிஸ்தான் விமான படைக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது.

அனைவருடனும் அமைதியை விரும்பும் நாம், நமது நாட்டை பாதுகாக்கும் கடமையையும் நினைவில் கொண்டுள்ளோம். அதில், ஒருவரும் தவறு செய்து விட கூடாது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com