ஐரோப்பிய நாடுகளில் வாட்டி எடுக்கும் வெப்ப அலை - 16 நகரங்களில் ரெட் அலர்ட் அறிவிப்பு

இத்தாலியின் 16 நகரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வாட்டி எடுக்கும் வெப்ப அலை - 16 நகரங்களில் ரெட் அலர்ட் அறிவிப்பு
Published on

ரோம்,

புவி வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில நாடுகளில் அதீத மழைப்பொழிவும், சில நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகின்றன.

வெப்பம் பற்றிய அளவீடுகள் தொடங்கப்பட்ட பின், 2023 ஜூன் மாதம் தான் உலகின் அதிகபட்ச சராசரி வெப்பம் பதிவாகி உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முந்தைய காலத்தை விட சராசரி வெப்ப அளவு அடுத்த சில ஆண்டுகளில் 1.5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி, போலாந்து உள்ளிட்ட நாடுகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தாலியின் 16 நகரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை முடிந்தவரை தவிர்க்குமாறும், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்புகள் உள்ளவர்களை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், "இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்ப அளவுகளை எல்லாம் இப்போது நாம் தாண்டி விட்டோம். கடந்த வாரம் மிக வெப்பமான நாட்களை எதிர்கொண்டோம். இன்னும் அதிக வெப்பமான நாட்கள் வர இருக்கின்றன. கடல் பரப்பிலும் வெப்பநிலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இது ஒரு அவசர நிலை" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com