சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் - உலக சுகாதார நிறுவன தலைவர் வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நியூயார்க்,

உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் ஆதனம் இணையவழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின்கீழ் கோவேக்ஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு இந்த அமைப்புக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன.

இந்த அமைப்பு, இதுவரை 124 நாடுகளுக்கு 6 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வினியோகித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு தயாரிப்பான தடுப்பூசியை இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், கோவேக்ஸ் அமைப்புக்கு சீரம் நிறுவனத்தால் தடுப்பூசி அனுப்ப முடியவில்லை. எனவே, இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, ஏற்கனவே அளித்த உறுதிமொழியை சீரம் நிறுவனம் காப்பாற்ற வேண்டும். கோவேக்ஸ் அமைப்புக்கு தடுப்பூசிகளை அளிக்க வேண்டும்.

உலகின் பல நாடுகளில் கொரோனா நீடித்து வருவதால், கோவேக்ஸ் அமைப்புக்கு தடுப்பூசி வரத்து குறைவாக உள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் தடுப்பூசி பற்றாக்குறை 19 கோடியாக உயரும் என்று தெரிகிறது.

பைசர் நிறுவனம் இந்த ஆண்டு 4 கோடி டோஸ் தடுப்பூசிகளும், மாடர்னா நிறுவனம் அடுத்த ஆண்டு 50 கோடி டோஸ் தடுப்பூசிகளும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனஎன்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com