

கொழும்பு,
இலங்கையில் அம்பாந்தோட்டை என்ற இடத்தில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றம் இத்தகைய போராட்டங்களில் ஈடுபட தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி இந்திய தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். போலீசாரின் தடுப்புகளை மீறி நமல் ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போதும் அவர்கள் கலையாததால் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். நமல் ராஜபக்சேவுடன் மேலும் இரண்டு எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், இந்த விமான நிலையம் சீனாவிடம் கடன் பெற்று ராஜபக்சே ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால் இதை தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதை அனுமதிக்க மாட்டோம் என்றனர். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சொந்த தொகுதியான அம்பந்தோட்டாவில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது.
உலகின் மிகவும் குறைந்த போக்குவரத்து கொண்ட விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். ஒருநாளைக்கு ஒரு விமான சேவை மட்டுமே இந்த விமான நிலையத்தில் உள்ளது. அம்பந்தோட்டாவில் உள்ள துறைமுகத்தின் பெரும்பாலான பங்குகளை சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் கடந்த ஜூலையில் வாங்கியதையடுத்து, இலங்கை அரசாங்கம் விமான நிலையத்தையும் விற்பனை செய்ய முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.