

கொழும்பு,
இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில், இலங்கையில் இணை மந்திரியாக இருக்கும் ரோஷன் ரனசிங்கே, வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிகாட்டி அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். பதவி விலகுவது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக ரோஷன் ரனசிங்கே கூறும்போது, "பொருளாதார நெருக்கடிக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உணவு பொருட்கள், எரி பொருட்களுக்காக மக்கள் வரிசையில் காத்து நிற்பது வேதனை அளிக்கிறது" என்றார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி சூழல் நிலவி வரும் நிலையில் மந்திரி ஒருவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.