

காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையிலும், அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன.அமெரிக்க ராணுவ தளபதி மார்க் மில்லி, கடந்த வியாழக்கிழமையன்று ஆப்கானிஸ்தான் வந்தார். அவர் தலைநகர் காபூலில் அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனியை சந்தித்து பேசினார். இரு தரப்பினரும் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அதிகளவிலான வன்முறைகள் குறித்து கவலை வெளிப்படுத்தினர்.
இந்த தருணத்தில் அங்குள்ள கஜினி மாகாணத்தின் கிலான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு ரிக்ஷா குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அந்தப்பகுதியில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அவர்களது உடல் பாகங்கள் சிதறின. அந்தப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் 15 குழந்தைகள் உடல்சிதறி பரிதாபமாக பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் உயிர்ப்பலி மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பு குறித்து கஜினி மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் வாகிதுல்லா ஜூமசாதா கூறுகையில், கிலான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட ரிக்ஷாவில் பொருட்களை விற்பனைக்காக ஒருவர் ஒரு கிராமத்திற்குள் எடுத்துச்சென்றபோது, அந்த ரிக்ஷாவில் குண்டு வெடித்திருக்கிறது என குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தாரிக் ஆர்யன் கூறும்போது, குரான் பாராயண நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் கூடி இருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர் என தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பை தலீபான் பயங்கரவாதிகள்தான் நடத்தி இருப்பார்கள் என்று போலீஸ் செய்தி தொடர்பாளர் அகமது கான் குற்றம் சாட்டினார். இந்த குண்டுவெடிப்பில் 15 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்திருப்பது அந்த நாட்டை உலுக்கி உள்ளது.