

மேட்ரிட்,
உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் ஸ்பெயினில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது. அந்நாட்டில் 2.9 லட்சத்திற்கும் கூடுதலானோர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஸ்பெயினில் கடந்த மார்ச் 14ந்தேதி ஊரடங்கு அமலானது. இதனால் அந்நாட்டில் திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் திருமண அரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டன.
எனினும், தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த வாரங்களில் ஊரடங்கு தளர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டன. இந்த சூழலில், அந்நாட்டில் இன்று ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் 4.7 கோடி மக்கள் இன்று முதல் நாட்டின் எந்த பகுதிக்கும் தடையின்றி சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பயணிகள் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தும் கட்டாயம் எதுவும் இல்லை. எனினும், இங்கிலாந்து தவிர்த்து, ஸ்கெஞ்சன் பகுதிகளை சேராத நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தும் விதி பொருந்தும்.
ஸ்பெயினில் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பங்கு வகிக்கும் கோடை கால சுற்றுலாவை இந்த முறை நடத்தும் நம்பிக்கையில் அந்நாட்டு அரசு உள்ளது. எனினும், ஸ்பெயின் நாட்டு மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்பொழுது, பிறரிடம் இருந்து 5 அடி விலகி இருக்க முடியாத நிலையில், முக கவசங்களை அணியும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.