

வாஷிங்டன்,
பயங்கரவாதம் அமெரிக்காவிற்கு பெரும் எச்சரிக்கையாக உள்ளது, பயங்கரவாதிகளின் பாதுகாப்பு புகலிடங்கள் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அந்நாட்டிடம் டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார் என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சிஐஏ தெரிவித்து உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வோர்க் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது என்றும் அந்த பயங்கரவாத இயக்கங்களின் பாதுகாப்பு புகலிடங்களை அழிக்கவும் பாகிஸ்தான் தவறிவிட்டது என அந்நாட்டுக்கு வழங்கவிருந்த 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதிஉதவியை டொனால்டு டிரம்ப் அரசு நிறுத்திவிட்டது. பாகிஸ்தானுக்கு வழங்கிய அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்துவிட்டது.
இப்போது அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சிஐஏ, பயங்கரவாதத்திற்கு புகழிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்பதே டொனால்டு டிரம்ப் விருப்பமாகும் என கூறிஉள்ளது.
அமெரிக்காவிற்கு ஆபத்தை விளைவிக்கும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் நிலைக்கொண்டு உள்ளனர், அவர்களுக்கு பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள், புகலிடம் பாதுகாப்பாக வழங்கப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து புகலிடம் அளிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என நாங்கள் எங்களால் முடிந்தவரையில் பாகிஸ்தானியர்களுக்கு தகவல்களை தெரிவித்துவிட்டோம். எனவே, நிபந்தனையின் பெயரில் அவர்களுக்கு உதவியை வழங்கி வந்தோம். அவர்கள் பயங்கரவாத பிரச்சனையை சரிசெய்தால், அவர்களுடன் நட்புறவை தொடர்வதில் எங்களுக்கும் மகிழ்ச்சியாகும்.
நாங்கள் அமெரிக்காவை பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கிறோம், என சிஐஏயின் தலைவர் மைக் பாம்போ கூறிஉள்ளார்.
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நிதியை நிறுத்தியது தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளித்து பேசிய மைக் பாம்போ, அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பு புகலிடம் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்பதே டொனால்டு டிரம்ப் விருப்பமாகும், பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி என்பதே முக்கிய நோக்கமாகும்,என குறிப்பிட்டார்.