

தெஹ்ரான்,
ஈரானில் அயதுல்லா அலி காமேனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, அந்நாட்டில் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது
இதன் காரணமாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி மக்கள் போராட்டல் வெடித்தது. போராட்டக்காரர்களை ஈரான் அரசு ஒடுக்கியது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் 6 ஆயிரத்து 221 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோரை ஈரான் அரசு கைது செய்தது.
இதனிடையே, போராட்டக்காரர்களை ஈரான் அரசு கொலை செய்தால், கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றினால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. அதேவேளை, ஈரானை நோக்கி அமெரிக்கா தனது படைகளை நகர்த்தி வருகிறது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன் மற்றும் பிற போர்க்கப்பல்களும் ஈரான் நோக்கி விரைந்துள்ளன. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், ஈரான் விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து நியாயமான ஒப்பந்தத்திற்கு வரும் என்று நம்புகிறேன். அணு ஆயுதங்கள் கிடையாது... அதுதான் அனைத்து தரப்பிற்கும் நல்லது. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது... உண்மையில் அதுதான் முக்கியம்.
ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லையென்றால் அந்நாட்டின் மீது ஜுலை மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை விட மோசமான தாக்குதல் நடத்தப்படும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப்பின் மிரட்டலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.