நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் 3 மாத கால அவசர நிலை பிரகடனம் - துருக்கி அரசு அறிவிப்பு

துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
Published on

இஸ்தான்புல்,

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் உள்ள காசியண்டெப் நகர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

துருக்கியில் 1939ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக இது கருதப்படுகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவுக்கு, உணவுகள், மருத்துவப்பொருட்கள், எரிபொருட்கள், மீட்பு படை விமானங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து அனுப்பி வருகின்றன.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் 3 மாத கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக துருக்கி அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் கூறுகையில், "துருக்கிய குடியரசின் வரலாற்றில் மட்டுமல்ல, நமது புவியியல் மற்றும் உலகின் மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றை நாங்கள் எதிர்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் படுக்கைகளுடன் 54 ஆயிரம் தற்காலிக மருத்துவக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 70 நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். எங்கள் மிகப்பெரிய நிவாரணம் என்னவென்றால், இதுவரை 8,000 க்கும் மேற்பட்ட எங்கள் குடிமக்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக 7 நாட்களுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அந்நாட்டின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com