

கீவ்,
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு உக்ரைன் அரசு புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
* உக்ரைன் அரசு தனது அண்டை நாடுகளுடன் பேசி அந்த நாடுகள் தங்கள் எல்லைகளை திறந்து உக்ரைன் மக்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
* இந்திய மக்கள் ரோமானியா மற்றும் ஹங்கேரி நாடுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
* இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன், மக்கள் நடமாட்டம் தொடங்கியவுடன், அருகிலுள்ள ரெயில் நிலையங்களை பயன்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* ரெயில் வழி பயணம் பாதுகாப்பானது. வழக்கமாக செல்லும் ரெயில்களில், டிக்கெட்டுகள் கிடைக்குமாயின் இப்போதே முன்பதிவு செய்து கொள்ளவும்.
* இதற்காக சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரெயில்களில், கட்டணம் ஏதுமின்றி, இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த ரெயில்களில் டிக்கெட்டுகள் எடுக்க தேவையில்லை.
* ரெயில் போக்குவரத்து குறித்து அறிந்து கொள்ள https://www.uz.gov.ua/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
* இந்தியர்கள் கூட்டம்கூட்டமாக பயணிக்க அறிவுறுத்தி உள்ளது. தனியாக யாரும் பயணிக்க வேண்டாம்.
* ரெயில் நிலையங்களில் குழந்தைகள் , பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
அனைவரும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்.
இந்த தகவலை உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அங்குள்ள இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு தெரியாமல் எந்தவொரு இந்தியரும் எல்லைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் விசா இன்றி போலந்து வர அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட மூன்றாவது விமானம் இன்று காலை 10. மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது. 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 3-வது விமானம் டெல்லியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.