ஐநா சபையை நடத்த பணம் இல்லை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வருத்தம்

ஐநா சபையை நடத்த பணம் இல்லை என அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்து உள்ளார்.
ஐநா சபையை நடத்த பணம் இல்லை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வருத்தம்
Published on

ஐக்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபை 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் நடத்தி வருவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் அக்டோபர் இறுதிக்குள் பணம் இல்லாமல் போகக்கூடும் என கூறி உள்ளார்.

குட்ரெஸ் ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறி உள்ளதாவது:-

2019 ஆம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவீதத்தை மட்டுமே உறுப்பு நாடுகள் வழங்கி உள்ளன. இது செப்டம்பர் மாத இறுதியில் 230 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறையாக உள்ளது. எங்கள் பணப்புழக்க இருப்புக்களை மாத இறுதிக்குள் குறைக்கும் அபாயத்தை நாங்கள் உணருகிறோம். எங்கள் நிதி ஆரோக்கியத்திற்கான இறுதி பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் உள்ளது என கூறி உள்ளார்.

செலவுகளைக் குறைக்க, மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ள இருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். அதே நேரத்தில் உத்தியோகபூர்வ பயணத்தை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே மேற்கொள்வது என முடிவு எடுத்துள்ளதாக கூறினார்.

பணப்புழக்க சிக்கல்களைத் தீர்க்க உலக அமைப்பிற்கு உதவுமாறு இந்த ஆண்டு தொடக்கத்தில் குட்ரெஸ் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டார், ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர் என பெயர் வெளியிட விரும்பாத ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

2018-2019 ஆம் ஆண்டிற்கான ஐ.நா.வின் வரவு செலவுத் திட்டம் 5.4 பில்லியன் டாலர் ஆகும். அமெரிக்கா 22 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com