

நியூயார்க்
சீன நிறுவனமான எஸ் இஸட் டிஜேஐ டெக்னாலஜி கம்பனியிடமிருந்து அமெரிக்க ராணுவம் தனது பயன்பாடுகளுக்கு டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை தருவித்து வந்தது. இப்போது திடீரென இவற்றின் பயன்பாடுகளை ஒட்டுமொத்தமாக நிறுத்தும்படி தனது அணிகளுக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்த டிரோன்களால் சைபர் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள ராணுவம் எவ்வாறு இந்த வாய்ப்பு ஏற்படுகிறது என்பதைக் கூறவில்லை. இந்த முடிவு குறித்து கருத்து வெளியிட்ட நிறுவனம் இப்படி முடிவெடுப்பதற்கு முன் தங்களை கலந்தாலோசிக்கவில்லை எனக் கூறியுள்ளது. மேலும் ராணுவத்தின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கத்தயாராக இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இது பற்றி அறிக்கை வெளியிட ராணுவம் தயாராகி வருவதாகவும் தெரிகிறது. கடந்த மே மாதம் டிஜேஐ டிரோனகள் தொடர்பாக ராணுவ ஆய்வு மையமும், கடற்படையும் அளித்த இரு வெவ்வேறு அறிக்கைகளின் மூலம் இந்த முடிவு எட்டப்படிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உலக டிரோன் சந்தையில் டிஜேஐயின் பங்கு சுமார் 70 சதவீதம் எனப்படுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் டிரோன் வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.