

மாஸ்கோ
இரண்டாம் உலக போரில் ஜெர்மனியை ரஷ்யா வென்று 73-வது ஆண்டு ஆகிறது. இந்த வெற்றி தினம் ஆண்டு தோறும் மே 9-ஆம் தேதி ரஷ்யாவில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இதையடுத்து நேற்று அந்நாட்டு ஜனாதிபதி புதின் தலைமையில் ராணுவத்தினர் பொதுவெளியில் அணிவகுப்பு நடத்தினார்கள். இதில் ஏராளாமான ராணுவ வீரர்கள், ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டார்கள்.
அணிவகுப்பில் 150 போர் விமானங்கள், சக்தி வாய்ந்த ஏவுகணைகள், 1,200 ஆயுத அமைப்புகள் காட்சிக்காக கொண்டுவரப்பட்டன. இதோடு பல்வேறு விதமான ராணுவ ஆயுதங்களும் காட்டப்பட்டன.வானவேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில், உலகளவில் அமைதி என்பது தற்போது பலவீனமாக உள்ளது என எச்சரிக்கை விடுத்தார்.இதோடு மனித இனம் அமைதி பலவீனமாக இருப்பதை உணர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், உலக பாதுகாப்பின் அனைத்து அம்சங்கள் குறித்து பேச ரஷ்யாவின் கதவுகள் திறந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.இதில் செர்பியா ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நிதன்யஹூ போன்றோரும் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டனர்.