

டாக்கா,
வங்காளதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
தேர்தலை முன்னிட்டு வன்முறை சம்பவங்களை தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 6 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இங்கு மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 10.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். வாக்கு பதிவானது 40,183 மையங்களில் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. 13 மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த மோதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.