இந்தியாவின் உணவு ஏற்றுமதி சிரமங்களுக்கு விரைவில் தீர்வு - உலக வர்த்தக அமைப்பு உறுதி!

உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகள் தடையாக உள்ளன.
இந்தியாவின் உணவு ஏற்றுமதி சிரமங்களுக்கு விரைவில் தீர்வு - உலக வர்த்தக அமைப்பு உறுதி!
Published on

வாஷிங்டன்,

இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உலக வர்த்தக நிறுவன (டபிள்யூ.டி.ஓ) பொது இயக்குநர் நகோஸி ஒகோன்ஜோ இவேலா தெரிவித்தார்.

இந்தியா தற்போது 20 நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஆண்டு 1.5 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு 11.10 கோடி டன் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பாண்டில் இந்தியாவின் தானிய உற்பத்தி உபரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக பல நாடுகளில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகள் தடையாக உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையில், உணவு தானியங்களை கொள்முதல் செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வதில் பிரச்சினைகள் உள்ளன.

குறிப்பாக பசியால் வாடும் நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்புவது அர்த்தமுள்ளதாக இருக்கும். அவ்விதம் அனுப்புவதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது என்று மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்திய அமெரிக்க சுற்றுப் பயணத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக, வாஷிங்டனில் நடைபெற்ற ஐ.எம்.எப் கூட்டத்தில் உலக வர்த்தக நிறுவன இயக்குநர் நகோஸி ஒகோன்ஜோ இவேலா கூறியதாவது:-

உணவுப்பொருள் ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகளுக்கு சுமுகத் தீர்வு காணப்படும். போர் காரணமாக இந்தியா இப்பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

அதேசமயம் உலக அளவில் போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது பெரும் பிரச்சினையாகும். போர் காரணமாக உணவு தானிய ஏற்றுமதி குறிப்பாக கோதுமை ஏற்றுமதி அதிகரிப்பது ஒரு சில நாடுகளுக்கு கிடைத்த வாய்ப்பு ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com