அரசுகளின் தலைமை பொறுப்பில் மோடியின் 25-வது ஆண்டு

கடும் விமர்சனங்களை தாண்டி குஜராத்தை மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் மோடி கொண்டு சென்றார்.
அரசுகளின் தலைமை பொறுப்பில் மோடியின் 25-வது ஆண்டு
Published on

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சமூக வலைத்தளத்தில் தான் மத்திய, மாநில அரசுகளின் தலைமை பொறுப்பில் 25-வது ஆண்டில் காலெடுத்து வைப்பதை நினைவு கூர்ந்து சில செய்திகளை வெளியிட்டு இருந்தார். முதல் முறையாக 2001-ம் ஆண்டில் இதே நாளில் குஜராத் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றேன். அதற்கு 9 மாதங்களுக்கு முன்பு நடந்த புஜ் பூகம்பத்தினால் ஏற்பட்ட அழிவுகளின் வடுக்கள் ஆறாத நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தனர். மேலும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவி வந்த நிலையில், அதற்கு முன்பு வீசிய கடும் புயல் தொடர்ந்து ஏற்பட்ட வறட்சியால் குஜராத் பாதிப்புக்குள்ளான நேரத்தில் நான் இந்த பதவிப்பொறுப்பை ஏற்றேன் என்று கூறியிருக்கிறார். மோடி முதல்-மந்திரி ஆவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். இயக்க உறுப்பினராகவும், பா.ஜனதா கட்சி நிர்வாகியாகவும் மட்டுமே இருந்தார்.

முதல்-மந்திரியாக பொறுப்பேற்கும் முன்பு அவருடைய தாயாரை சந்தித்து அதை சொன்ன நேரத்தில், அவர் எனக்கு உன் வேலையைப் பற்றி அதிகம் தெரியாது. நான் உன்னிடம் இரண்டு விஷயங்களை மட்டும் எதிர்பார்க்கிறேன். முதலாவதாக, நீ எப்போதுமே ஏழைகளுக்காகவே பணியாற்றவேண்டும். இரண்டாவது நீ ஒருபோதும் லஞ்சம் வாங்கக்கூடாது என்று சொன்னதையே இதுவரை கடைபிடித்து வருகிறேன் என்று அந்த செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நான் என்ன செய்தாலும், அதன் நோக்கம் கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும் என்று உறுதியளித்தார்.

2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அவர் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நேரத்தில், அந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு விரிவாக்கம், நகர்ப்புறங்களை நவீனமயமாக்குதல் போன்றவற்றில் அதிக முனைப்புடன் செயல்பட்டு குஜராத் மாடல் என்று பெயர் வாங்க செய்தார். அவர் பதவியேற்ற 2-வது ஆண்டில் மிக மோசமான இன கலவரம், கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு போன்ற நிகழ்வுகளுக்காக கடும் விமர்சனங்களை தாண்டித்தான் குஜராத்தை மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். 2013-ம் ஆண்டு பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் பதவியில் இப்போது 3-வது முறையாக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் பிரதமர் பதவியில் அவர் பெயர் சொல்லும் அளவில் பல திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறார்.

2014 முதல் 2019 வரையில் பதவி வகித்தபோது இந்தியாவில் தயாரிப்போம், வெளிநாட்டுக்கும் வழங்குவோம், டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா திட்டங்களைக் கொண்டு வந்து ஜி.எஸ்.டி.யை நடைமுறைக்கு கொண்டு வந்தாலும், பண மதிப்பிழப்பு இன்றளவும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 2019 முதல் 2024 வரையில் இரண்டாவது முறை பிரதமர் பொறுப்பில் இருந்தபோது, ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அனைத்து நல திட்டங்களிலும் ஆதார் இணைப்பு போன்றவற்றை நிறைவேற்றினார். இந்த காலக்கட்டத்தில் கொரோனா பாதிப்பை திறமையாக சமாளித்தார். இப்போது 3-வது முறையாக பதவி வகிக்கும் நேரத்திலும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வெளிநாடுகளோடு நட்புறவு பாராட்டி, அனைவருக்கும் நண்பராக திகழ்கிறார். மொத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை படைத்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com