2029-ல் ஒரே நாடு ; ஒரே தேர்தல் !

‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
2029-ல் ஒரே நாடு ; ஒரே தேர்தல் !
Published on

சென்னை,

நாடு முழுவதும் 18-வது மக்களவை தேர்தலுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில், 2029-ல் நடக்கும் அடுத்த தேர்தலின்போது, மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும்நிலை இப்போதே பா.ஜனதா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த தேர்தல் முடிந்து 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும். 'ஒரே நாடு-ஒரே தேர்தல்' என்பதை பா.ஜனதா இப்போது சொல்லவில்லை. 1984-ல் நடந்த மக்களவை தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியிலேயே தெரிவித்துள்ளது. இதுதொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், 2019-ல் நடந்த தேர்தலுக்கு பிறகுதான் 'ஒரே நாடு-ஒரே தேர்தல்' என்பது ஒரு முழு வடிவம் பெற்றது.

2019 தேர்தலின்போது பா.ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களும் நடக்கும், அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அடுத்த தேர்தல் வரும் நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜனதாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை பிரதமர் நரேந்திரமோடி எடுத்துவிட்டார்.

'ஒரே நாடு-ஒரே தேர்தல்' குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மிக விரிவாக அனைவரிடமும் கருத்து கேட்டது. பொதுமக்களிடம் மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகள், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதிகள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் என்று பலதரப்பட்ட நிபுணர்களிடமும் கருத்துகேட்டது. இந்த கருத்துகளையெல்லாம் நன்கு ஆராய்ந்து 18,626 பக்கங்களில் அறிக்கையாக தயாரித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அந்த குழு வழங்கியுள்ளது.

'ஒரே நாடு-ஒரே தேர்தல்' முடிவுக்கு மொத்தம் 62 அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டதில், 47 கட்சிகள் அதற்கு தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தன. பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. உள்பட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த அறிக்கையில், "மக்களவை தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தலாம். இதற்கு அரசியல் சட்டத்திருத்தம் தேவை. ஆனால் மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவையில்லை" என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களை முடித்த அடுத்த 100 நாட்களில், அனைத்து உள்ளாட்சி தேர்தல்களையும் நடத்தலாம். இதற்கும் அரசியல் சட்டத்தில் திருத்தம்வேண்டும். அதோடு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதலும்வேண்டும்.

பா.ஜனதாவுக்கு மக்களவையில் முழு மெஜாரிட்டி கிடைக்கும்பட்சத்தில் 50 சதவீத மாநில சட்டசபைகளின் ஒப்புதலைப்பெற்று, 2029-ல் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் எண்ணத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. இதன்படி இடையில் ஒரு சட்டசபையின் பதவிக்காலம் ஏதாவது காரணத்துக்காக முடிந்துவிட்டால், 5 ஆண்டு பதவிக்காலத்தில், பணியாற்றிய பதவிகாலத்தை கழித்து மீதமுள்ள காலத்துக்கு மட்டுமே தேர்தல் நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த கணக்குப்படி, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2026-ல் தேர்தல் நடந்தால், அந்த சட்டசபையின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்தான் இருக்கும். ஏனெனில், 2029-ல் ஒரே நேரத்தில் மக்களவை தேர்தலுடன் நடத்த அறிவிப்பு வந்துவிடும். இப்போதைய நிலையில், நிச்சயமாக 2029-ல் 'ஒரே நாடு-ஒரே தேர்தல்' வந்துவிடும் என்று பா.ஜனதாவால் நம்பப்படுவதால், அதற்குரிய அளவில் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பயனுள்ள விவாதங்கள் நடக்கவேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com