100-வது நாளை எட்டும் மனதின் குரல்

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, கேட்பவர்களை அப்படியே ஈர்க்கும் ஆற்றல் படைத்தது.
100-வது நாளை எட்டும் மனதின் குரல்
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, கேட்பவர்களை அப்படியே ஈர்க்கும் ஆற்றல் படைத்தது. அதனால்தான் எந்த கூட்டத்தில் அவர் பேசினாலும், ஏற்ற இறக்கங்களோடு 'கணீர்... கணீரென்ற' அவரது குரல், நேரில் கேட்பவர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலியில் கேட்பவர்களின் மனங்களை அப்படியே அவரிடம் கொண்டு சேர்த்துவிடுகிறது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அவர் வானொலியில் 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் பேசுவது மிகவும் வித்தியாசமானது. இது பிரதமரின் பேச்சு மட்டுமல்லாமல் பல்வேறு சாதனைகளை படைத்த சாதாரண குக்கிராம மக்களுடன் அவர் பேசும் உரையாடலின் ஒலிபரப்பாகும்.

இது மக்களுக்கும், பிரதமருக்கும் ஒரு நேரடி தொடர்பை உருவாக்கும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் பிரதமருக்கு மக்கள் அனுப்பும் கடிதங்களை மேற்கோள்காட்டி அவர் பேசுவதாகவும் இருக்கும். ஆக, 'மனதின் குரல்' நிகழ்ச்சி பிரதமர், நாட்டு மக்களுடன் பேசும் நிகழ்ச்சி என்றாலும் பெரும்பாலும் மக்களின் பங்களிப்போடுதான் இருக்கிறது.

இந்த மனதின் குரல் நிகழ்ச்சி முதலாவதாக 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சை நாடு முழுவதும் 262 வானொலி நிலையங்கள், 375-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் சமூக வானொலி நிலையங்கள் மூலம் கேட்கலாம். இதுமட்டுமல்லாமல் பிரசார் பாரதி இந்த நிகழ்ச்சியை 11 வெளிநாட்டு மொழிகள் உள்பட 52 மொழிகளில் மொழியாக்கம் செய்து ஒலிபரப்புகிறது. இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், உயர்ந்த மலை பிரதேசங்களில் வாழும் மக்களும் கேட்க முடிகிறது. வானொலி மட்டுமல்லாமல் தூர்தர்ஷன் நெட்வொர்க்கில் உள்ள 14 சேனல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தனியார் டெலிவிஷன்களும் ஒரே நேரத்தில் இதை ஒளிபரப்பு செய்வதால், அனைத்து மக்களையும் இது சென்றடைகிறது.

மக்களின் மனதைக்கவர்ந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்ச்சி 30-ந்தேதி (நாளை மறுநாள்) வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சி கொரோனா காலத்தில் மக்களை தடுப்பூசி போட வைத்ததில் பெரும் பங்காற்றியது. இதுபோல பல சமூக பிரச்சினைகளுக்கு மக்கள் தீர்வு காணவும் துணைபுரிந்தது. 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறள் உள்பட தமிழ் இலக்கியங்களை கோடிட்டு காட்ட தவறுவதில்லை. தமிழ் கலாசாரத்தையும், தமிழ்மொழியையும் எப்போதுமே மிக பெருமையாக பேசும் அவர், இந்த நிகழ்ச்சியிலேயே 'உலகில் மிக தொன்மையான மொழி தமிழ்மொழி' என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். 'இதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைகொள்ள வேண்டும்', என்றும் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பலருடன் அவர் நடத்திய உரையாடல் ஒலிபரப்பாகி இருக்கிறது. குறிப்பாக 'முத்ரா' திட்டத்தில் கடன்பெற்று ஜெம் இணையதளம் மூலமாக பிரதமர் அலுவலகத்துக்கே 'பிளாஸ்க்' சப்ளை செய்த மதுரையை சேர்ந்த இல்லத்தரசி அருள்மொழி சரவணன் குறித்து 2017-ல் பேசிய அவர், 2019-ல் மதுரை வந்தபோது அவரை அழைத்து பேசி பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு மக்களின் வாழ்வில் இரண்டற கலந்து மக்களுக்கும், பிரதமருக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தியுள்ள 'மனதின் குரல்' நிகழ்ச்சி 100-வது நாளோடு நின்று விடக்கூடாது, தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com