சகோதர பாசத்தின் வலிமையை உணர்த்தும் ரக்சா பந்தன்

சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துகிறார்கள்.
சகோதர பாசத்தின் வலிமையை உணர்த்தும் ரக்சா பந்தன்
Published on

சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவைக் கொண்டாடும் இந்து பண்டிகை ரக்சா பந்தன். உடன்பிறப்புகளுக்கு இடையிலான பிணைப்பின் அடையாளமாக, இந்த நாளில் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி தங்கள் நலனில் அக்கறை காட்டும் உறவுகள், அன்போடு பழகும் நபர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பெண்கள் ராக்கி கயிறு கட்டி மகிழ்வார்கள்.

இந்த ஆண்டு, ரக்சா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துகிறார்கள். பதிலுக்கு சகோதரர்களும், தனது சகோதரி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உறுதியளித்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். அத்துடன் சகோதரிகளுக்கு பரிசு அல்லது பணம் கொடுத்து மகிழ்ச்சி அடைய வைக்கிறார்கள். வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த பண்டிகை, இப்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் ஏன்?

புராணங்களின்படி கிருஷ்ண பகவானின் கையில் காயம் ஏற்பட்டபோது, பாண்டவர்களின் மனைவியான திரவுபதி தனது சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து காயம்பட்ட மணிக்கட்டில் கட்டினார். திரவுபதி வெளிப்படுத்திய அன்பின் காரணமாக திரவுபதியை எப்போதும் பாதுகாப்பேன் என கிருஷ்ணர் உறுதியளிக்கிறார். அஸ்தினாபுரம் அரசவையில் கவுரவர்கள் திரவுபதியின் ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்த முயன்றபோது கிருஷ்ணர் அதை தடுத்து தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். கிருஷ்ணரின் கையில் திரவுபதி தன் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்சா பந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது.

ரக்சா பந்தன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதையும் சொல்லப்படுகிறது. இதன்படி, ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் இந்திராணி தேவி மற்றும் இந்திர கடவுளுடன் தொடர்புடையதாகும். இது புனிதமான கயிற்றின் சக்தியை விவரிக்கிறது. கொடூரமான அரக்கர்களின் சவாலை ஏற்று இந்திரர் போர்க்களம் செல்கிறார். அரக்கர்களின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாது எனத் தெரிந்த நிலையில் இந்திராணி தேவி இந்திரரின் கையில் ரக்ஷா எனும் புனித கயிற்றை கட்டுகிறார். இதன் விளைவாக அரக்கர்களை போரிலும் வீழ்த்துகிறார்.

இவ்வாறு புராணங்களின் அடிப்படையில் ரக்ஷா பந்தன் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு பல கதைகள் சொல்லப்பட்டாலும், உடன்பிறப்புகளுக்கு இடையேயான அன்பையும், பாசத்தையும், சகோதர பாசத்தின் வலிமையையும் உணர்த்தும் வகையில் இப்பண்டிகை அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com