விதிகளை மீறுவோர் மீது உறுதியான நடவடிக்கை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

எந்தக் கட்சியினர் என்றாலும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
விதிகளை மீறுவோர் மீது உறுதியான நடவடிக்கை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விதிகளை மீறுவோர் எந்தக் கட்சியினர் என்றாலும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  உத்தரவிட்டுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு - கேரளா மாநிலங்களுக்கு இடையேயான குன்னூர் அருகேயுள்ள சோதனைச் சாவடியில், தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் பிரசார ஊர்வலத்தை சோதனை செய்வதில் கவனக்குறைவாக இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.ஊடக செய்திகளின் அடிப்படையிலும், நீலகிரி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் செலவினப் பார்வையாளர் மேற்கொண்ட விசாரணையின்படியும், பறக்கும் படையின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரி கீதா இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அவரது தேர்தல் பணி செயல்பாடுகளில் குறைபாடு காணப்பட்டதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அந்த ஒட்டுமொத்த பறக்கும்படையும் மாற்றப்பட்டுள்ளது.தேர்தல் செலவினப் பார்வையாளரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். அங்கிருந்த வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் எடுத்த 2 வீடியோ புகைப்படங்களையும் அவர் பார்த்தார்.

அந்த வீடியோக்களும், ஊடகங்கள் காட்டிய வீடியோக்களையும் பார்த்தபோது, தற்செயலாக மேலோட்டமான சோதனை மேற்கொள்வது போல் காணப்படுகிறது. ஊர்வலத்தில் வந்த மற்ற வாகனங்கள் சோதனை செய்யப்படவில்லை.பிரபலமான வேட்பாளர்கள் மீது மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வதை தேர்தல் கமிஷன் மோசமான குற்றமாக எடுத்துக்கொள்ளும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக காணப்பட்டால், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் மேல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com