இத்தாலி ஓபன் டென்னிஸ்: பெடரர், நவோமி ஒசாகா காயத்தால் விலகல்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக கால்இறுதி ஆட்டத்தில் இருந்து ரோஜர் பெடரர், நவோமி ஒசாகா ஆகியோர் விலகினார்கள்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: பெடரர், நவோமி ஒசாகா காயத்தால் விலகல்
Published on

ரோம்,

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 2-6, 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் குரோஷியாவில் போர்னா கோரிக்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

கால்இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்தார். இந்த நிலையில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெடரர் போட்டியில் இருந்து விலகினார். இது குறித்து 37 வயதான ரோஜர் பெடரர் கருத்து தெரிவிக்கையில், கால்இறுதி ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நான் 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லாததால் எனது அணியினருடன் கலந்து ஆலோசித்து விலகல் முடிவை மேற்கொண்டேன். அடுத்த ஆண்டு இந்த போட்டிக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன் என்றார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் ரபெல் நடால்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

இன்னொரு கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 2-6 என்ற நேர்செட்டில் 24-ம் நிலை வீரரான டிகோ ஸ்வார்ட்ஸ்மனிடம் (அர்ஜென்டினா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), 4-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை சந்திக்க இருந்தார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நவோமி ஒசாகா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிகி பெர்டென்ஸ் போட்டியின்றி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் செக்குடியரசு வீராங் கனை கரோலினா பிளிஸ்கோவா 6-7 (5-7), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்ததுடன் 500-வது வெற்றியையும் ருசித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com