பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகிய நவோமி ஒசாகாவிற்கு செரினா வில்லியம்ஸ் ஆதரவு

பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்த நவோமி ஒசாகாவிற்கு முன்னனி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகிய நவோமி ஒசாகாவிற்கு செரினா வில்லியம்ஸ் ஆதரவு
Published on

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜப்பானின் நவோமி ஒசாகா, ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனை அடுத்து போட்டி அமைப்பு குழுவின் விதிமுறையை மதிக்காமல் நடந்து கொண்ட நவோமி ஒசாகாவுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக பிரெஞ்ச் ஓபன் போட்டி அதிகாரி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்த விவகாரம் தொடர்பாக நவோமி ஒசாகா, பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். உண்மை என்னவென்றால், 2018 ஆம் ஆண்டு யு.எஸ். ஓபன் போட்டியில் இருந்து நான் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன், சமாளிக்க எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னை அறிந்த எல்லோருக்கும் நான் திடமான சிந்தனை உடையவர் என்பது தெரியும் என்று நவோமி ஒசாகா பதிவிட்டுள்ளார்.

நவோமி ஒசாகாவின் இந்த அறிவிப்பிற்கு பல முன்னனி வீரர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் முன்னனி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், ரூமேனியா வீராங்கனை இரினாவிற்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் நவோமி ஒசாகாவின் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நவோமியின் முடிவு குறித்து சிறிது நேரத்திற்கு முன்பு தான் தெரிந்து கொண்டேன். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக நவோமி கூறியிருக்கிறார். அவரது நிலையில் நானும் இருந்திருக்கிறேன். என்னால் அவரை புரிந்து கொள்ள முடிகிறது.

அவருக்கு எனது ஆதரவை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒவ்வொருவரும் பிரச்சினைகளை கையாள்வதில் வெவ்வேறு முறைகளை பின்பற்றுகிறோம். நவோமி தனக்கு சரி என்று தோன்றுவதை செய்யட்டும். அவர் திறமையானவர். அவர் தன்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்து வருகிறார்.

இவ்வாறு செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com