டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் இடைநீக்கம்

பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெங் சூவாய் தற்போது உலக தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 20-வது இடத்திலும், ஒற்றையர் பிரிவில் 80-வது இடத்திலும் உள்ளார்.
டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் இடைநீக்கம்
Published on

லண்டன்,

சீனாவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய். 2013-ம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் 2014-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெங் சூவாய் தற்போது உலக தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 20-வது இடத்திலும், ஒற்றையர் பிரிவில் 80-வது இடத்திலும் உள்ளார். கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பெங் சூவாய், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.

இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் தன்னுடன் இணைந்து விளையாடும் வீராங்கனையின் பெயரை போட்டி அமைப்பாளர்களிடம் தெரிவித்து இருந்த பெங் சூவாய், கடைசி நேரத்தில் தன்னுடன் இணைந்து விளையாட சம்மதித்து இருந்த வீராங்கனையை கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சித்துள்ளார். ஜோடி வீராங்கனை மறுத்ததால் போட்டியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார். ஆதாயம் பெறும் நோக்கில் பெங் சூவாய் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த செயல் விளையாட்டு ஊழல் தடுப்பு விதிமுறைக்கு எதிரானதாகும்.

இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச டென்னிஸ் சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு பெங் சூவாயை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை காலத்தில் அவர் முதல் 3 மாதங்களில் எந்தவித விதிமுறை மீறலிலும் ஈடுபடாமல் இருந்தால், அவரது தடை காலம் 3 மாதமாக குறைக்கப்படும். அதாவது அவர் வருகிற நவம்பர் 8-ந் தேதி முதல் மீண்டும் களம் திரும்பலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com