துளிகள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
Published on

* இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் உள்ளூர் போட்டிகள் முடிவில் மாநில அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான இந்த கூட்டம் மும்பையில் வருகிற 17ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்க முதல்முறையாக மாநில பெண்கள் அணியின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பெண்கள் அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். மொகாலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பீல்டிங் செய்கையில் கேதர் ஜாதவ் இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் அவர் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இதனால் அவர் உலக கோப்பை அணியில் நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கேதர் ஜாதவின் காயம் லேசானது தான் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தொடருவார் என்று தேர்வு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* 8 அணிகள் இடையிலான 20 ஓவர் மும்பை லீக் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வருகிற 14ந் தேதி முதல் 26ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வடக்கு மும்பை பாந்தர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த 19 வயது இளம் வீரரான பிரித்வி ஷா இருப்பார் என்று அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com