தமிழக வெற்றிக் கழக மாநாடு: புதுச்சேரியில் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் நினைவாக, மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. 27-ம் தேதி மாநாடு தொடங்கும் முன்பு திடலின் எதிரில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடியேற்றுகிறார்.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடலில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்புக் கோரி, கட்சி சார்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் 33 நிபந்தனைகளை விதித்த காவல் துறை, அவற்றில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது.

இந்த சூழலில் மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து மாநாடு பணிக்காக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ஒப்புதலுடன், வருகிற 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள கழக வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான பணிகளுக்காகத் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com