வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்..!

இருப்பதை வைத்து திருப்தி அடையாதவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள்.
happiness in life
Published on

ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் என்று சிலர் பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். ஆசைகளை கட்டுப்படுத்தினால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம் என்று சொல்வதையும் கேள்விப்படுகிறோம். ஆனால் உயிர் வாழ்வது என்பதே ஆசைதான் எனும்போது, ஆசையற்ற வாழ்க்கை ஏது?

எனவே, நமது செயல்கள் மற்றும் ஆசையின் அடிப்படையை பொருத்துதான் நல்லது கெட்டது அனைத்தும் அமைகிறது. வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் செயல்படும்போது நிம்மதி குலைகிறது.

சிலருக்குத் தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தும், அடுத்தடுத்த பொருளாதார தேடல் காரணமாக ஒருவித மன இறுக்கத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கண்டும் திருப்தியடைய மாட்டார்கள். அதனால் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி குறைந்துவிடுகிறது. இவ்வாறு வாழ்க்கையில் இருப்பதை வைத்து திருப்தி அடையாதவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு முடிவுரையாகும்.

ஒரு ஊரில் ஒரு வியாபாரி நன்கு வியாபாரம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. அந்த ஊரை ஒட்டிய பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும்போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக ஊரில் உள்ளவர்கள் பேசிக் கொண்டனர்.

இதனைக் கேட்ட வியாபாரி, உடனே வியாபாரத்தை விட்டு, புதையலைத் தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றான். தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழம் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.

அதுவரை வியாபாரத்தின் மீது முழுக் கவனம் செலுத்திய அவன், இப்போது புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்துவிட்டது. அதனால் ஏமாற்றம் அடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் உன்னிடம், ''இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதை விட்டு, இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் துயரம் தான்'' ஏற்படும் என்றார்.

தவறை உணர்ந்த வியாபாரி அன்று முதல் தனது தொழிலில் மட்டும் கவனம் செலுத்தி கிடைக்கும் லாபத்தை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்தினான். வாழ்க்கையிலும் மகிழ்ச்சி உண்டானது.

எனவே ஆசைகள் இருக்கலாம், பேராசை இருக்கக்கூடாது. பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com