உண்மையான அமைதி எது?

பாறைக்குள் வேரைப் போன்று, சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.
உண்மையான அமைதி எது?
Published on

அமைதியான மனநிலை, அமைதியான வாழ்க்கை என்பதையே அனைவரும் விரும்புவர். அன்பாகவும் அமைதியாகவும் இருப்பதுதான் மனித இயல்பு. ஆனால் அனைத்து சூழ்நிலைகளிலும் அது வாய்ப்பதில்லை. சிலர் எதற்கெடுத்தாலும் பதற்றம், பயம் என தன்னைத் தானே வருத்திக்கொண்டு அமைதியை இழப்பார்கள். இந்த வழக்கம் தொடரும்பட்சத்தில் மருந்து மாத்திரைகள் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இந்த மனப் போராட்டத்தில் வெற்றி பெறுவதில்தான் அமைதியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

அதனால், நம்மைச் சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில் சாத்தியமில்லை.

தொடர் நீர்வீழ்ச்சியைப் போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஓய்வதில்லை. அந்த வேலைகளுக்கு இடையேயும், அமைதியான உறக்கம் போல, நம் உள் மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது. அந்த அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும்.

அனைத்து வசதிகளும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதி அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒரு நாள் விடியும் என்று தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே.. அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களை விட, "நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்குப் பெரிது" என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டு இருக்கிறார்களே… அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி. பாறைக்குள் வேரைப் போன்று, சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.

எனவே, தொல்லைகளும் துன்பங்களும், பிரச்சினைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவற்றைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே உண்மையான அமைதி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com