கொஞ்ச நேரமாவது சைக்கிள் ஓட்டுங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லது..!

சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.
Published on

சில வருடங்களுக்கு முன்புவரை மக்களின் வாழ்வில் சைக்கிள் இரண்டறக் கலந்திருந்தது. கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் மக்கள் சைக்கிளில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். சைக்கிள் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. வயது முதிர்ந்தவர்கள்கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று வருவார்கள்.

சைக்கிள் ஓட்டுவதால் உடல் மட்டுமின்றி மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.

ஆனால் பைக், கார் போன்ற மோட்டார் வாகனங்கள் வரத் தொடங்கியபிறகு சைக்கிள் பயன்பாடு படிப்படியாக குறைந்துவிட்டது. கிராமங்களில் கூட சைக்கிள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது. ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு சைக்கிள் இருந்த நிலை மாறி, இப்போது வீட்டுக்கு வீடு மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

சைக்கிள் ஓட்டுவதை குறைத்ததுடன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறைக்கு பெரும்பாலான மக்கள் பழகிவிட்டார்கள். இதுதவிர உணவு பழக்கங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் உடல், நோய்களின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, இப்போது சைக்கிளின் முக்கியத்துவத்தை பலரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவுனம் திரும்பியிருக்கிறது.

உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுவதை காண முடிகிறது. சிலர் உடற்பயிற்சிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சைக்ளிங் மெஷின்களை வாங்கி வீட்டிலேயே பயன்படுத்துகின்றனர். இது நல்ல முன்னேற்றமாக இருந்தாலும், இன்னும் விழிப்புணர்வு தேவை.

எனவே, சைக்கிள் ஓட்டும் பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. உடல் நலம், சுற்றுச்குழல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்ற போக்குவரத்து முறை சைக்கிள் என்பதால் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க உலக சைக்கிள் தினம் ஒரு பாலமாக அமைந்துள்ளது.

அவ்வகையில் இன்று உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. சைக்கிள் ஓட்டும் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

சைக்கிளில் இருந்து எந்த வாயுவும் வெளியாவது இல்லை. ஒருவர் தனது காரை விட்டு விட்டு சைக்கிளை பயன்படுத்துகிறார் என்றால், அவர் ஒரு கிலோ மீட்டருக்கு 150 கிராம் கார்பன் வெளியாவதை தடுக்கிறார். 7 கி.மீ சைக்கிள் ஓட்டினால் 1 கிலோ கார்பன் வெளியாதை தடுக்கிறார். கார்பன் வெளியாவதை தடுப்பதில் சைக்கிள் பயன்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதுடன் சுற்றுச்சூழலையும் காக்கிறது. எனவே, ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும் சிறிது நேரமாவது சைக்கிள் ஓட்டுவது நல்லது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com