மக்களை ஒன்றிணைக்கும் உலகளாவிய மொழி.. உலக இசை தினத்தை கொண்டாடுவோம்..!

இசையின் முக்கியத்துவத்தையும், அது மனதுக்கும், உடலுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை எடுத்துரைக்கவும் உலக இசை தினம் உதவுகிறது.
World music day 2024
Published on

இசையை ஊக்குவிக்கும் வகையிலும், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை கவுரவிக்கும் வகையிலும் உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 1982-ம் ஆண்டு பிரான்சில் முதல் உலக இசை தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்சில் மட்டும் கொண்டாடப்பட்ட இந்த தினம், தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

மக்களை ஒன்றிணைக்கும் உலகளாவிய மொழியாக இசை திகழ்கிறது. இசையை கேட்பதனால் நம் மனநலத்திலும், உடல்நலத்திலும் பல நேர்மறையான எண்ணங்கள் உருவாகுவதாகவும், மனஅழுத்தம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இசையின் முக்கியத்துவத்தையும், அது மனதுக்கும், உடலுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை எடுத்துரைக்கவும் இந்த நாள் உதவுகிறது.

இந்த நாளில் இசை ஆர்வலர்கள் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை மக்களுக்கு பூங்காக்கள், அரங்கங்களில் வழங்குகின்றனர்.

இசை தினத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் இசையினால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் சக்தியையும் அவரவர்களின் ரசனைக்கு ஏற்ப, நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். குறிப்பாக தங்களுக்கு நெருக்கமான இசைப் பிரியர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மனதுக்கு நெருக்கமான பரிசுகளை வழங்கி வாழ்த்துவதும் உண்டு.

இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகளை வாங்கி கொடுப்பது, இசைக்கருவிகளை பரிசளிப்பது என எந்தப் பரிசைத் தேர்வு செய்தாலும், அது அவர்கள் மீதான அன்பின் வெளிப்பாடாக இருப்பதால் நெருக்கம் இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, இனிமையான அனுபவத்துடன் இசை தினத்தை கொண்டாடுவோம். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com