தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி
x
தினத்தந்தி 15 May 2024 8:20 PM GMT (Updated: 16 May 2024 12:35 PM GMT)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 19-21, 18-21 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் மீராபா லுவாங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இந்த ஆட்டம் 55 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 15-21, 21-13, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மாட்ஸ் கிறிஸ்டோபர்சென்னிடம் வீழ்ந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா சரிவில் இருந்து மீண்டு வந்து 19-21, 21-15, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் எஸ்தர் நூருமி வார்டோயாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 21-14, 14-21, 9-21 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் லியானி டானிடம் போராடி வீழ்ந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத் 11-21, 10-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹான் யுவிடம் தோல்வி அடைந்தார். இதேபோல் இன்னொரு இந்திய வீராங்கனை இமாத் பரூக்கி சமியா 13-21, 13-21 என்ற நேர்செட்டில் சீனாவின் காவ் பாங் ஜியிடம் பணிந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-13, 21-13 என்ற நேர்செட்டில் மலேசியாவின் நூர் முகமது ஆரின் அயூப் ஆரின்-தான் வீ கியோங் கூட்டணியை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.


Next Story