சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்


சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
x

வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு தீவிர வெப்ப அலை வீசுவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுமையம் விடுத்திருக்கிறது.

கோடை வெயிலின் தாக்கத்தை மனிதர்களே சமாளிக்க முடியாத நிலையில், வனப்பகுதிகளிலும், சரணாலாயங்களிலும் வாழ்ந்து வரும் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் தங்களின் உணவு மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வனப்பகுதிகளுக்குள் இருக்கும் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளும் வறண்டு போய் இருப்பதாலும், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினாலும், போதுமான தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகளுக்கு உடல்ரீதியாக பெரும்பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயங்களில் வனத்துறை சார்பாக சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து, அதில் போதுமான அளவு தண்ணீரை தேக்கிவைத்து, கோடைவெயிலில் சிக்கித் தவிக்கும் பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் தாகத்தை போக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Next Story