கவிதை போல ஒரு வாழ்க்கை வேண்டும் - மனுஷி


கவிதை போல ஒரு வாழ்க்கை வேண்டும் - மனுஷி
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 7 May 2022 8:23 AM GMT)

2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் என்னுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்கு சாகித்ய அகாதமியின் யுவபுரஷ்கர் விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. சண்டிகரில் நடைபெற்ற விருது விழாவில் அவ்விருதினைப் பெற்றுக் கொண்டேன்.

“எழுதுவதற்காக கவிதை என்னைத் தேர்ந்தெடுத்து கொண்டது. அது இன்னும் எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லுமோ, அதுவரை அதனோடு ஒரு நாய்க்குட்டி போல பின் தொடர்ந்து செல்ல வேண்டும்” என்கிறார் மனுஷி எனும் புனை பெயர் கொண்ட ஜெயபாரதி. தனது கவிதைகளுக்காக சாகித்ய அகாதமியின் ‘யுவபுரஷ்கர் விருது’ பெற்றவர். கவிதை எழுதுவதோடு மட்டுமில்லாமல், திரைப்பட பாடல்களும் எழுதி வருகிறார். அவரது  பேட்டி...

“திருநாவலூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்த பெண் நான். இலக்கிய பின்புலம் எதுவும் இல்லாத குடும்பச் சூழலில் வளர்ந்தேன். சிறு வயது முதல் கதைகள் கேட்பதும், வாசிப்பதும் என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது”.

கவிதை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
கவிதை எழுதுவது பற்றிய புரிதலெல்லாம் எனக்கில்லை. என் மனதின் உணர்வுகளை எழுதிப் பார்க்கத் தொடங்கினேன். அது எனக்குப் பெரும் ஆசுவாசமாகவும், விடுதலையாகவும் இருந்தது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியான வாசிப்புதான், கவிதை எழுதக் காரணம். வாழ்க்கை கற்றுத் தந்த அனுபவங்களை மொழியின் துணை கொண்டு உரையாடிப் பார்க்கிறேன்.

விஞராக உங்களது பயணம் பற்றி சொல்லுங்கள்?
எழுதுவதுதான் எனது வாழ்க்கை எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள், முத்தங்களின் கடவுள், ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள், கருநீல முக்காடிட்ட புகைப்படம், யட்சியின் வனப்பாடல்கள் என இதுவரை எனது ஐந்து கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன.

‘யுவபுரஷ்கார்’ விருது கிடைத்தது பற்றி கூறுங்கள்?
2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் என்னுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்கு சாகித்ய அகாதமியின் யுவபுரஷ்கர் விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. சண்டிகரில் நடைபெற்ற விருது விழாவில் அவ்விருதினைப் பெற்றுக் கொண்டேன்.



நீங்கள் வாங்கிய மற்ற விருதுகள் என்ன?
ஈரோடு தமிழன்பன் விருது, தமிழக அரசின் இளம் படைப்பாளர் விருது, திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது, பூவரசி இலக்கிய விருது, இலக்கியத்திற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருது போன்ற விருதுகளை பெற்றிருக்கிறேன். கவிதை தொடர்பான மாநாடுகளிலும், இலக்கிய விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறேன்.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
எதிர்கால திட்டமென்று என்னிடம் எதுவுமில்லை. ஏனெனில், நாம் திட்டமிட்டபடி வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை நாளை என்பதே ஒரு பெரும் கனவு. இந்த நாள், இந்தக் கணம் மட்டுமே நிச்சயம். நாளை என்பது காலத்தின் கையில்தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இன்றைய தினம் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம். எனது திட்டங்கள் எல்லாமே அந்தந்த கணத்தில் எடுக்கும் முடிவுகள்தான். வாழ்க்கை அனுமதிக்கும் காலம் வரை தொடர்ச்சியாக எழுத வேண்டும். அது மட்டுமே எனது எதிர்காலத் திட்டம்.

நாவல், கட்டுரைகள் எழுதுவதில் விருப்பம் உண்டா?
கவிதை என் அடையாளமாக இருக்கிறது. ஏற்கனவே சிறுகதைகள் எழுதி, அவை இதழ்களிலும் பிரசுரமாகி இருக்கின்றன. இதுவரை நான் மேற்கொண்ட பயணங்களில், நான் பெற்ற அனுபவங்களை பகிர்வாக எழுதி வைத்திருக்கிறேன். அதைப் புத்தகமாக்கும் முயற்சியும் இருக்கிறது. எனது நாவலையும் விரைவில் தொடங்க வேண்டும்.

பாடலாசிரியராக உங்கள் அனுபவம் பற்றி ெசால்லுங்கள்?
எனது நண்பர் கேட்டதற்காக ‘கீதா கோவிந்தம்’ எனும் தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை டியூனாக வைத்து தமிழ் வரிகள் எழுதினேன். அதுதான் பாடலாசிரியராக என் முதல் அனுபவம். அந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து வ.கீரா இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘இரும்பன்’ திரைப்படத்தில் நான் எழுதிய பாடல் இப்போது வெளியாகி இருக்கிறது.

மனுஷி பெயர் காரணம் என்ன?
சுயமரியாதையும், சுயதேர்வும், கனவுகளும், லட்சியங்களும் நிறைந்த சுயமான பெண் நான் என உணரத் தொடங்கியபோது ‘மனுஷி’ என்று என்னை நானே அழைத்துக் கொண்டேன். சுயமான பெண்ணாக தன்னை உணர்கிற எல்லா பெண்களுமே மனுஷிகள் தான்.

உங்கள் கவிதைகளில் அதிகம் தென்படும் ‘மாயா’ யார்?
என் கவிதைகளில் இடம்பெறும் ‘மாயா’ தனிநபர் அல்ல. ஆணோ, பெண்ணோ அல்ல. பால் அடையாளம் கடந்த ஓர் ஆன்மா. என் கவிதைகளில் நான் உரையாடுவதற்காக உருவாக்கிக் கொண்ட கவிதைப் படிமம் தான் ‘மாயா’. எனது கவிதைகளை நீங்கள் வாசிக்கும்போது யார் யாரெல்லாம் உங்கள் நினைவடுக்குகளில் வந்து போகிறார்களோ, அவர்கள் எல்லோருமே என் கவிதையின் ‘மாயா’ தான்.

உங்கள் தேவதை யார்?
என் அம்மா, நான் வளர்த்த நாய்க்குட்டி, எழுத்தாளர் பிரபஞ்சன்... இவர்கள் என் வாழ்வின் தேவதைகள். 

Next Story