பாத வெடிப்புக்கான தீர்வுகள்


பாத வெடிப்புக்கான தீர்வுகள்
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 7 May 2022 8:11 AM GMT)

வேப்பிலையும், மஞ்சளும் சிறந்த கிருமி நாசினிகளாகும். இவை இரண்டையும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பாத வெடிப்பு மறையும்.

மது முழு உடல் எடையையும் தாங்கும் பாதங்களை முறையாகப் பராமரிப்பது முக்கியமானது. சருமத்தில் ஏற்படும் வறட்சி, அதிகப்படியான உடல் எடை, காலணி அணியாமல் வெளியே செல்வது, கால்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளாதது போன்ற காரணங்களால் பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். காலணி அணியாமல் நடக்கும்போது, பாதங்களில் உள்ள வெடிப்பு வழியாக தீங்கு விளைவிக்கும் கிருமிகள் உடலுக்குள்  நுழைய வாய்ப்பு அதிகம்.

பாத வெடிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும். நாள்பட்ட பாத வெடிப்பு பிரச்சினை, பாதங்களில் பெரிய பிளவுகளை ஏற்படுத்தி, வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். சில சமயம் ரத்தக் கசிவு கூட ஏற்படும்.

பாத வெடிப்பு இருப்பவர்கள் வீட்டிலேயே இயற்கை முறையில் இதற்கு தீர்வு காணலாம். தினமும் குளிக்கும்போது பாதங்களை ஸ்கிரப்பர் வைத்து நன்றாகத் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். இதனால் பாதங்களில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மையாகும். 

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவி, துடைக்க வேண்டும். பின்பு, விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடு படுத்தி, வெதுவெதுப்பாக பாதங்களில் தடவி வர வேண்டும்.

மிதமான சூடு உள்ள வெந்நீரில், எலுமிச்சை சாறு பிழிந்து, சிறிதளவு கல் உப்பு சேர்க்கவும். அதில் சிறிது நேரம் பாதங்களை வைத்திருந்து, பின்பு ஸ்கிரப்பர் வைத்து மென்மையாக தேய்க்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், பாதங்களில் உள்ள கடினமான சருமம் மென்மையாகும். மீண்டும் அழகான பாதங்களைப் பெறலாம்.

வேப்பிலையும், மஞ்சளும் சிறந்த கிருமி நாசினிகளாகும். இவை இரண்டையும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பாத வெடிப்பு மறையும். இவற்றோடு எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை பழத்தோலைக் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் எளிதில் நீங்கி, வெடிப்பு விரைவில் குணமாகும்.

மருதாணி உடல் வெப்பத்தைத் தணிக்கும் அருமருந்து. அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து அரைத்து பாதங்களில் பூசி வந்தால், வெடிப்பினால் வரும் எரிச்சல் நீங்கும். பாதங்களில் அவ்வப்போது கற்றாழை ஜெல்லை தடவியும் பயன் பெறலாம். உருளைக்கிழங்கை அரைத்து பூசி வந்தால் பாதத்தில் வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பளபளப்பாகும்.

உயர்ந்த குதிகால் காலணிகளைத் தவிர்த்து, பாதுகாப்பான காலணிகளை அணிவதும் அவசியம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பல உறுப்புகளை இணைக்கும் முக்கிய நரம்புகள் பாதங்களில் ஒன்றினைகின்றன. பாதங்களை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். 

Next Story