தமிழகத்தில் அம்மா மருந்தகங்களை மூடவில்லை - தமிழக அரசு


தமிழகத்தில் அம்மா மருந்தகங்களை மூடவில்லை - தமிழக அரசு
x
தினத்தந்தி 21 Nov 2021 12:35 AM GMT (Updated: 21 Nov 2021 12:35 AM GMT)

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இயங்கும் அம்மா மருந்தகங்களை மூடவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக அரசு நிதி நெருக்கடியை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இயங்கும் அம்மா மருந்தகங்களை மூடவில்லை என்றும் இது குறித்து எதிர்கட்சித் தலைவர் தவறான தகவல் அளித்திருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் இயங்கும் அம்மா மருந்தகங்களில் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்வதால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருவதை அரசு நன்கு உணர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126-ல் இருந்து 131 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும் நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 60 என்ற எண்ணிக்கையை விட அதிகமாக 75 என்ற எண்ணிக்கையில் தமிழகத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Next Story