750 பவுன் நகை கொள்ளை - உறவினர் திருடியது போலீஸ் விசாரணையில் அம்பலம்


750 பவுன் நகை கொள்ளை - உறவினர் திருடியது போலீஸ் விசாரணையில் அம்பலம்
x
தினத்தந்தி 4 Feb 2022 9:55 AM GMT (Updated: 4 Feb 2022 9:55 AM GMT)

அறந்தாங்கி அருகே 750 பவுன் கொள்ளை போன சம்பவத்தில் உறவினரே நகையை திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்சாதிக். இவர் புருனை  நாட்டில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி கோபாலப்பட்டினத்தில் உள்ள தன் வீட்டின் கதவை உடைத்து 750 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து  உள்ளதாக போலீசில் புகார் கொடுத்தார். 

சம்பவ இடத்துக்கு வந்து மீமிசல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் நேரில் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் விட்டின் அருகே இருந்த சிசிடிவி பதிவுகள், குற்ற சம்பவங்களில் தொடர் உடையவர்கள் மற்றும் உறவினர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது  உறவினர்கள்  ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளை போன வீட்டின் பின்பக்கத்தில் உள்ள கிணற்றில் போலீசார் சோதனை செய்தனர். கிணற்றின் மேற்ப்புறத்தில் மூடப்பட்டு இருந்த கதவு சிறிதாக திறந்திருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். 

பின்னர் கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றிய போது காணாமல் போன தங்க நகைகள் மூட்டையாக கிணற்றுக்குள் கிடப்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த அறந்தாங்கி போலீஸ் டிஎஸ்பி தினேஷ்குமார், நகை மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நகையை எடை போட்டதில் 559 சவரன் நகை இருப்பது தெரிய வந்தது.

750 பவுன் கொள்ளை போனதாக புகார் அளித்துள்ள நிலையில் 559 சவரன் நகை மட்டுமே கிடைத்துள்ளது. கிடைக்க பெற்ற நகையை கைப்பற்றிய போலீசார், காணாமல் போன நகை எவ்வாறு கிணற்றுக்குள் வந்தது, மதீ நகை எங்கே என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது ஜாபர்சாதிக்கின் உறவினர் கமருஜமானும்  இவருடைய நண்பர் அசாருதீனும் நகையை திருடியது தெரிய வந்தது. கமருஜமானிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வெளிநாட்டில் வேலை செய்து வரும் கமருஜமான் கடந்த டிசம்பர் மாதம் ஊருக்கு வந்த போது ஜாபர்சாதிக்கின் வீட்டில் இருந்த நகையை திருடி உள்ளார். ,

திருடிய நகையுடன் சென்னையில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு,  வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவதுபோல் வந்துள்ளார். போலீசாரின் விசாரணை தீவிரம் அடைவதை அறிந்து கமருஜமான், திருடிய நகையை வீட்டின் பின் பக்கத்தில் உள்ள கிணற்றில் போட்டு உள்ளார்.

மேலும் உடந்தையாக இருந்த அசாருதீனை கைது செய்ததன் மூலம் அவரிடம் இருந்த  9 பவுன் நகைகளை மீட்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட  2 பேரையும் அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளோம் என்று தெரிவித்தார் 

உறவினர்களே நகையைத் திருடி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story