கொடநாடு வழக்கு; முன்னாள் எம்.எல்.ஏ.விடம் விசாரணை


கொடநாடு வழக்கு; முன்னாள் எம்.எல்.ஏ.விடம் விசாரணை
x
தினத்தந்தி 15 April 2022 10:10 AM GMT (Updated: 15 April 2022 10:10 AM GMT)

கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மேற்கு மண்டல் ஐ.ஜி. சுதாகர் தெரிவித்துள்ளார்.

கோவை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளியை கொலை செய்து, ஒரு மர்ம கும்பல் பங்களாவில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில் சசிகலாவின் உறவினரான விவேக்கிடம் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் இன்று கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார். 

Next Story