ருமேனியா மற்றும் மால்டோவா நாடுகளிலிருந்து 6222 இந்தியர்கள் மீட்பு! - மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா


ருமேனியா மற்றும் மால்டோவா நாடுகளிலிருந்து 6222 இந்தியர்கள் மீட்பு! - மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா
x
தினத்தந்தி 5 March 2022 10:24 AM GMT (Updated: 5 March 2022 10:24 AM GMT)

இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர விமானங்கள் இயக்குவதற்காக புதிதாக ஒரு விமான நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புக்காரெஸ்ட்,

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து சென்று அங்கிருந்து விமானம் மூலம் மீட்கும் பணியை மத்திய அரசு முழுவீச்சில் செய்து வருகிறது. இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக மத்திய மந்திரிகள்  அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இந்த மீட்பு பணிக்கு ‘ஆபரேசன் கங்கா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா இப்போது ருமேனியாவில் இந்திய மாணவர்களுடன் உள்ளார்.

இந்த நிலையில் அவர் ருமேனியாவிலிருந்து டுவிட்டரில் அங்குள்ள கள நிலவரம் குறித்தும், ‘ஆபரேசன் கங்கா’ பணியின் நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய தகவல்களை பதிவிட்டுள்ளார். 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-

கடந்த 7 நாட்களில்  உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் மால்டோவா நாடுகளில் தஞ்சம் அடைந்த  6222 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர விமானங்கள் இயக்குவதற்காக புதிதாக ஒரு விமான நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள சக்கீவா விமான நிலையம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

சக்கீவா விமான நிலையத்திலிருந்து எளிதாகவும் விரைந்தும் இந்தியர்களை விமானம் மூலம் மீட்க முடியும்.

உக்ரைன் எல்லையிலிருந்து  ருமேனிய தலைநகர் புக்காரெஸ்ட் 500 கி.மீ தொலைவில் உள்ளது. ஆகவே கால விரயம் ஏற்படுகிறது. இதனை இனிவரும் நாட்களில் தவிர்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

அடுத்த இரண்டு நாட்களில் 1050 மாணவர்கள் தாயகம் திரும்புவார்கள். கடந்த 7 நாட்களில் ருமேனியாவில் இருந்து மட்டும் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியில் 29 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். 

Next Story