ரசாயன ஆயுதங்களை 600 முறை பயன்படுத்திய உக்ரைன்; ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு
தீங்கு ஏற்படுத்தும் தலங்களை உக்ரைனின் உயரதிகாரிகள் தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.;
கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது 3-ம் ஆண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. தொடர்ந்து நடந்து வரும் போரின் ஒரு பகுதியாக சமீபத்தில், ரஷியாவின் எண்ணெய் கப்பல் மற்றும் எண்ணெய் களம் ஆகியவற்றின் மீது உக்ரைன் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. இது ரஷியாவின் நிதி நிலைமையை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளில் உக்ரைன் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளது என ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. அந்நாட்டின் உயரதிகாரியான அலெக்சி டிஸ்சேவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, குளோரோபிக்ரின், சி.எஸ். வாயு, பிரஸ்சிக் அமிலம் உள்பட பல்வேறு ரசாயன பொருட்களை கொண்டு 600-க்கும் மேற்பட்ட முறை உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. படுகொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு உள்ளன.
உக்ரைனில் உள்ள ரசாயன மற்றும் அணு ஆயுத அமைப்புகளுக்கும் கூட அச்சுறுத்தல்கள் உள்ளன என குறிப்பிட்ட அவர், அவை தீங்கு விளைவிக்கும் ஆபத்துகளும் உள்ளன என கூறினார். ரசாயன ஆயுத தாக்குதலுக்காக ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிபொருட்களையும் உக்ரைன் பயன்படுத்தியது. தீங்கு ஏற்படுத்தும் தலங்களை உக்ரைனின் உயரதிகாரிகள் தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.
எனினும், இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் உடனடியாக வெளியிடப்படவில்லை. போர்க்களத்தில் பாதுகாப்பு மற்றும் ரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தம் ஆகியவற்றுடன் ஒத்து போக வேண்டிய சூழலில், இதுபோன்ற சூழல், தீவிர கவலை கொள்ள செய்துள்ளது.