எனது சாதனையை ரோகித் சர்மா முறியடித்ததில் மகிழ்ச்சி - பாக்.முன்னாள் கேப்டன்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

கராச்சி, 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் நொறுக்கியவரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் (351 சிக்சர்) 15 ஆண்டுகால சாதனையை சமீபத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா முறியடித்தார். இந்நிலையில் தனது சாதனையை உடைத்த ரோகித் சர்மாவை அப்ரிடி பாராட்டியுள்ளார்.

இது குறித்து அப்ரிடி அளித்த ஒரு பேட்டியில், ஒருநாள் போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்தவர் என்ற சாதனை கிட்டதட்ட 18 ஆண்டுகள் என்னிடம் இருந்தது. ஆனால் இறுதியில் அது முறியடிக்கப்பட்டது. சாதனைகள் என்றாலே முறியடிக்கக்கூடியதுதான். ஒரு வீரர் சாதனையை படைப்பார். இன்னொரு வீரர் அதை தகர்ப்பார். அதுதான் கிரிக்கெட்.

இப்போது அதிக சிக்சர் சாதனையை எனக்கு எப்போதும் பிடித்தமான ஒரு வீரர் உடைத்தது மகிழ்ச்சியே. 2008-ம் ஆண்டு முதலாவது ஐ.பி.எல். தொடரில், நானும், ரோகித் சர்மாவும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறோம். டெக்கான் அணியின் பயிற்சியின்போது அவரது பேட்டிங்கை பார்ப்பேன். அவரது தரம் என்னை வெகுவாக கவர்ந்தது. அப்போதே, அவர் ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று நினைத்தேன். அது போலவே அவர் தன்னை ஒரு தரமான பேட்டர் என்பதை நிரூபித்து காட்டினார் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com