

சென்னை,
நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாக விமர்சனம் செய்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில்,
ஒரு மாநிலத்தில் துயர மற்றும் ஊழல் சம்பவங்கள் நிகழ்ந்தால் அம்மாநில முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்? தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்து உள்ளது. என்னுடைய நோக்கமானது சிறந்த தமிழகமாகும். என்னுடைய குரலை வலுவாக்கும் தைரியம் யாருக்கு உள்ளது? திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். தற்போது உள்ள அரசியல் கட்சிகள் சரியில்லையெனில் மற்றொன்றை தேட வேண்டியவரும் என பதிவிட்டு உள்ளார்.
இதற்கு அ.தி.மு.க சார்பில் கண்டனம் தெரிவிக்கபட்டு உள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-
தேவையில்லாமல் கமல் சிங்கத்துடன் மோதிக்கொண்டு இருக்கிறார். தனி மனித வாழ்க்கையிலேயே ஒழுக்கமாக கமல்ஹாசன் நடந்து கொள்ளவில்லை. கமல்ஹாசன் நிலைபாட்டுக்கு அ.தி.மு.க ஆட்சியை குறை சொல்லும் தகுதி இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் என்ன குறை கண்டார்.விஸ்பரூபம் படப்பிரச்சினையில் அதி.மு.க மீது கமல்ஹாசன் அதிருப்தியாக் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது-
முதலமைச்சர் பலவீனமாகிவிட்டார் என்பதை கமல்ஹாசன் உணர்த்துகிறார். ஊழல் குற்றச்சாட்டை கமல்ஹாசன் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். என கூறி உள்ளார்
அன்வர் ராஜா எம்.பி கூறியதாவது:-
சரியான பாதையில் தமிழகம் செல்லவில்லை என்றால் முறையான விளக்கம் தர வேண்டும். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் குதிரைபேரம் நடக்க எங்கு வாய்ப்பு இருக்கிறது. என கூறினார்.