

பிரபல நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை கதை இந்தியில் படமாகி உள்ளது. அவரது சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த படத்துக்கு சஞ்சு என்று பெயரிட்டுள்ளனர்.
சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு இந்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இம்மாதம் இறுதியில் படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் சஞ்சய்தத் படத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் பிரித்வி மஸ்கி என்பவர் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள சஞ்சு படத்தில் சிறையில் கழிவறை நிரம்பி வழிவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி மூலம் சிறைச்சாலையை மோசமாக சித்தரித்து உள்ளனர். இதனால் மக்களுக்கு சிறைத்துறை மீதும், சிறை அதிகாரிகள் மீதும் தவறான எண்ணம் ஏற்படும். இந்த காட்சிகள் தொடர்பாக தணிக்கை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டு உள்ளார். இதனால் சஞ்சய்தத் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.